புளித்துப் போன உறவை வீசிவிடலாமா?
கேள்வி ஆன்மீகப் பாதையில் படியெடுத்து வைத்தவுடன் எனது வாழ்க்கைத் துணை இனி எனக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது?
சத்குரு:
“அவரை புறந்தள்ளிவிட்டு அடுத்த ஆளை தேடுங்கள்,” என்று எந்தக் காரணத்திற்காகவும் நான் சொல்ல மாட்டேன். ஆன்மீகக் காரணங்களுக்காக மட்டுமல்ல, எந்தக் காரணத்திற்காகவும் நான் இந்த அறிவுரையை உங்களுக்கு வழங்கப் போவதில்லை. ஒருவரை ஆன்மீகத்திற்காகவும், மற்றொருவரை காதலிப்பதற்காகவும் இன்னொருவரை சுகத்திற்காகவும் மணந்து கொள்வீர்கள்! மனிதர்களை பயன்படுத்தித் தூக்கியெறியும் பொருளாக நீங்கள் பார்க்கத் துவங்கியபின், வாழ்வின் அடிப்படை அர்த்தத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இப்படிப்பட்ட மனநிலைக்கு ஒரு பரிசு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு.
ஆன்மீகத்தின் பெயரில் பொறுப்பற்ற செயல்கள் நிறையவே நிகழ்ந்துவிட்டன. அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ள ஆன்மீகத்தை சாக்காக பயன்படுத்தாதீர்கள். நீங்கள் எத்தனை மாடர்னான ஆளாக இருந்தாலும், உங்களுக்குள் இன்னும் பொறாமையின், இழப்பின் காட்டம் வீசுகிறதே! அத்தனை பேரையும் அரவணைத்துக் கொண்டு வாழும் உயிராக நீங்கள் மாறிவிட்டீர்களா என்ன? உங்கள் கணவரோ, மனைவியோ எங்கு சென்றாலும், அவருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று வாழும் நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களா என்ன? இவை எல்லாவற்றின் மீதும் அக்கறை கொண்டவர்தானே நீங்கள்? ஒரு டஜன் மக்களை உங்கள் உள்ளத்திலிருந்து வீசியெறிந்திருக்கலாம், ஆனால் நீங்கள் யாரை வீசியெறிந்தீர்கள் என்பது உங்கள் தேர்வின்படித் தானே நடந்தது?
உலகம் முழுவதிலும் மக்கள் ஏதோ ஒருவிதமான திருமண அமைப்பிற்கு உடன்பட்டு இருக்கிறார்கள். வெவ்வேறு சமூகங்கள் இதனை வெவ்வேறு விதமாகக் கையாண்டிருந்தாலும் ஏதோ ஒருவிதமான திருமண அமைப்பிற்குள் அவை பொருந்திப் போயே இருக்கின்றன. திருமணம் செய்துகொண்ட இருவர் ஒருவிதமான அன்யோன்ய உணர்வைப் பகிர்ந்து கொண்ட பின்னர், அது தேவையான உறுதியுடன் தொடர்ந்து நிகழ வேண்டும். உறுதியில்லாமல் ஒரு உறவு நிகழும்போது, அது மனிதனுக்குள் சீர்குலைவை ஏற்படுத்தும். மேலும், மனித சீர்குலைவு சமுதாயச் சீர்குலைவிற்கும் வித்திடும்.
5000 வருடங்களுக்கு முன் கிருஷ்ணர் இதைப் பற்றி பேசினார். குழந்தையின் மனோநிலையை தெள்ளத் தெளிவாக உணர்ந்து அவர் இதைச் சொல்லியிருக்கிறார். “பெற்றோர் பொறுப்பில்லா உறவில் ஈடுபடும்போது, அவர்களுடைய குழந்தைகளும் பெற்றோர் மீது பொறுப்பில்லாத பிள்ளைகளாகவே வளர்வார்கள், இதனால் அவர்கள் சிறந்த மனிதர்களாகவும் வளராமல் போகலாம்.” இந்த வார்த்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இதுவே மனித மனத்தின் நிலை. பெற்றோர் இல்லா பிள்ளைகள் தமக்குள் ஒருமைப்பாட்டுடன் இருந்தால், அவர்கள் சிறப்பாக வளரும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்களது மனம் உருபெறும் பால்ய வயதில் குழப்பம் மேலோங்கி இருந்தால், எஞ்சிய தன் வாழ்க்கை முழுவதும் அவர்கள் வாழ்வில் குழப்பமே மேலோங்கும்.
ருனானு பந்தம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனித உடலுக்கென்று ஒரு நினைவாற்றல் இருக்கிறது. இதனை யோகத்தில் ‘ருனானு பந்தம்‘ என்போம். நீங்கள் உண்ணும் உணவோ, வாழும் சூழலோ அவை எல்லாவற்றையும் உடல் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் மற்றொரு ஜென்மம் எடுத்து பிறந்து வந்தால், உங்கள் உடலிற்கு அத்தனை ஞாபகமும் இருக்கும். உடல் சார்ந்த அன்யோன்யம் மேலோங்கும்போது ‘ருனானு பந்தம்‘ இன்னும் உறுதியாகும்.
இந்தக் கலாச்சாரத்தில், தாங்கள் வாழும் இடத்தைப் பற்றி மக்கள் அதிக கவனம் எடுத்துக் கொண்டனர். இதனாலேயே ஒரு நாளை எவ்வாறு துவங்குவது, வீட்டை எவ்வாறு பராமரிப்பது, வீட்டில் எப்போதும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று பல வழிமுறைகளை உருவாக்கி வைத்தனர்.
உங்களுக்கு சரியானவற்றை தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவு இல்லாவிட்டாலும், நீங்கள் சரியான திசையில் செல்லவும், உங்கள் உடல் சரியானவற்றை கிரகித்துக் கொள்ளவும் இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கி வைத்தனர். உடலில் தவறான பதிவுகள் சேர்ந்தால், வாழ்வை அது தவறான திசையில் கொண்டு சென்றுவிடும். இத்தனை ஏன், யாரோ ஒரு மனிதர் உங்களைத் தொடுவது கூட உங்கள் மீது ஒரு குறிப்பிட்ட பதிவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? “சாகும் வரை நான் உன்னை பிரியமாட்டேன்” என்று மக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? ஏனெனில், பொறுப்பில்லாமல் உடல் புணர்ச்சி நிகழக் கூடாது.
நவீனம் என்ற பெயரில் நாம் உருவாக்கி வைத்த அடிப்படைகளை தளர்த்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு பெருத்த விலை கொடுக்கப் போகிறோம் என்பது நிச்சயம். இதுபோன்ற சூழ்நிலை, உணர்வுநிலையிலான பாதுகாப்பின்மையை உண்டாக்கும். உங்களுக்குள் பாதுகாப்பின்மை மேலோங்கி நிற்கும்போது உங்கள் மனதும் உடலும் தன் முழு வீரியத்துடன் செயல்படாது.
நீங்கள் செய்யும் அத்தனை விஷயங்களும் வேலை செய்கிறது ஆனால் உறவு வேலை செய்யவில்லை, அல்லது உங்கள் உறவில் எல்லை மீறி வன்முறைகளின் எல்லைகளை தொட்டுவிட்டீர்கள், வார்த்தைகள் வரம்பு மீறி பிரயோகிக்கப்பட்டு விட்டன என்னும்போது அந்த உறவிலிருந்து வெளிவருவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் ஏதோ ஒரு உறவிலிருந்து வெளிவரும்போது அதற்குப்பிறகு தேவையான காலம் ஒதுக்குங்கள். ஏனெனில், அந்த உறவு முறிந்ததற்கு உங்களுடைய 50% பங்களிப்பும் இருந்ததல்லவா? அந்த 50 சதவிகிதத்தை சரிசெய்ய குறைந்தது 6 மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பழைய உறவை வீழ்த்திச் சரித்த நீங்கள், அது சரிந்ததற்கு உங்கள் பங்கான 50 சதவிகிதத்தை சரி செய்திடுங்கள். பொறுப்பான செய்கை அல்லவா இது?
ஆன்மீகத்தின் பெயரில் பொறுப்பற்ற செயல்கள் நிறையவே நிகழ்ந்துவிட்டன. அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ள ஆன்மீகத்தை சாக்காக பயன்படுத்தாதீர்கள். உண்மையாகவே உங்களுக்கு வளர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால், யாரைப் பிடிக்காதோ அவருடன் சேர்ந்து வாழ்வது மிக அவசியம். வேலை நிமித்தமாக மக்களை நான் ஒன்று சேர்க்கும்போது, ஒத்துப் போகாதவர்களையே ஒன்றிணைக்கிறேன். வெவ்வேறு வகையான குணமுள்ள மக்களை ஒன்றுகூட்ட முயற்சிப்பதால், ஈஷா அறக்கட்டளையின் செயல்கள் சற்றே சிரமத்திற்கு உள்ளாகின்றன.
வேலை நடக்க வேண்டும் என்பதே நம் விருப்பம், ஆனால் அந்த வேலையை செய்வதில் மக்கள் வளர்கிறார்களா அல்லது செய்யும் செயலில் ஈடுபடுவதற்கு பதிலாக சிக்கிப் போகிறார்களா என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தவொரு விஷயம் கவனிக்கப்படவில்லை என்றால் மக்கள் எதற்காக ஈஷாவில் வேலை செய்ய வேண்டும்? அவர்கள் ஒரு கார்ப்ரெட்டில் வேலை செய்யட்டுமே, கை நிறைய ஊதியமாவது கிடைக்குமே? நீங்கள் இங்கு வந்திருப்பதே வளர்வதற்காகத்தான், வேலை செய்வதற்காக அல்ல. உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் வளரும் ஆர்வம் இருப்பதால் நம்முடைய வேலையும் முக்கியத்துவம் பெறுகிறது, தேவைப்படுகிறது. அவர்களுக்கு நாம் சரியான தளம் அமைத்துத் தர வேண்டும் அல்லவா? அதனால் நாம் செய்யும் வேலையில் நம் எல்லைகளைக் கடந்து வளர்கிறோமா அல்லது எல்லைகளை வகுத்துக் கொண்டு அதனுள்ளேயே சிக்கிப் போகிறோமா என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
“அவருள் சரியான சக்தி சூழ்நிலை இல்லை,” “அவர் அப்படித்தான்” என்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் மேல் அவதூறுகளைப் பட்டியலிட்டாலும், இவை யாவும் உங்கள் திருமண உறவை முறிப்பதற்கு போதிய காரணங்கள் அல்ல. உறவு உண்மையிலேயே கசந்தால், அதனைவிட்டு வெளிவர அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் உறவினை புளித்த பழத்தைத் தூக்கி எறிவது போல் தூக்கி எறிய வேண்டாம். அந்த மனிதர்களை நம் வழிக்கு மாற்ற வழியும் இருக்கிறது.
மேற்கத்திய உலகில், மனிதர்களுக்குள் ஆழமான பாதிப்பு இருப்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே சுமுகமான, நம்பகமான உறவு வாய்க்கிறது. மற்றவர்கள் பாதுகாப்பில்லாத உறவுகளுடனேயே வாழ்கின்றனர். இது சுதந்திரம் அல்ல. உணர்வு நிலையில் பாதுகாப்பின்மையில் வாழ்வதென்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாத கர்மப் பிணைப்பை ஏற்படுத்தும். பிரயோஜனமாய் ஏதோ ஒன்றைச் செய்ய, ஒன்றில் கவனத்துடன் வேரூன்றி, சிறந்த உற்பத்தித் திறனுடன் செயல்பட ஒருவருக்கு அசைவில்லாத அஸ்திவாரம் தேவை. உங்களுக்கு உறவு தேவையில்லை என்றால், உங்கள் கண்களை மூடி உங்களால் சுகமாக அமர முடியுமென்றால், அனைவரையும் விட்டுவிலக உங்களுக்கு பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுவது சிறந்ததல்ல. எனக்குள் நீதி போதனைகள் எதுவும் கிடையாது, எனக்குள் இருப்பதெல்லாம் உயிர்நோக்கம் மட்டும்தான். எது வேலை செய்கிறதோ நாம் அதைச் செய்வோம்.
No comments:
Post a Comment