Friday 11 July 2014

அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம் July 12, 2014

அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்

அச்சிட அச்சிட
கதிரவன் மேற்கே சாய ஆரம்பிக்கிறான். உலர்ந்த பாலைவனக் காற்று மெதுவாக வீசிக்கொண்டிருக்கிறது. வடக்கே ஸ்ட்ராபெரி தோட்டம். கிழக்கே நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மக்காச் சோளக் கதிர்கள் காற்றில் தலைகளை ஆட்டிக்கொண்டு இருக்கின்றன. வடமேற்கே நான்கைந்து குன்றுகள் காணப்படுகின்றன. அவற்றில் இடது கோடியில் உள்ள குன்றுக்கு மட்டும் மூன்று சிகரங்கள் இருக்கின்றன. மாலை நிழல் மெல்ல அக்குன்றினில் படிய ஆரம்பிக்கறது. சிறிது நேரத்தில் நிழல் படிந்த அக்குன்று நம்மை வியைப்பிலும், பக்திப் பரவசத்திலும் ஆழ்த்திவிடுகிறது. காரணம்…
arizona-temple-1
… நடுச் சிகரத்திலிருந்து மேலிருந்து கீழாக வளைந்து காணப்படும் நிழல் வலம்புரியான துதிக்கை போன்று தோன்றுகிறது. வலது, மற்றும் இடது சிகரங்கள் காதுகளாகப் பரிணமிக்கின்றன. குன்றின் நடுவில், இடதுபுலத்தில் குத்தவைத்த கால் போன்று ஒரு நிழல் தோன்றுகிறது. உற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது.
arizona-temple-2இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான். ஒவ்வொரு நாளும் மாலை 3:45 மணியிலிருந்து, 5 மணிவரை இந்த அற்புதத் தோற்றம் அந்த முச்சிகரங்கள் உள்ள குன்றில் தென்படுகிறது. ஆனைமுகனே தனது கோவிலை தினமும் பார்த்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறான் என்னும் அளவுக்குச் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளது மகாகணபதி டெம்பிள் ஆப் அரிசோனா (Maha Ganapati Temple of Arizona).
பீனிக்ஸ் பெருநகரில் கோவிலே இல்லையே என்ற ஆதங்கத்தால், கவ்வையில் (Kauii) இருக்கும் சைவ ஆதீன ஸ்தாபகர், சமாதி அடைந்த குருதேவர் சுப்பிரமுனிய சுவாமி அவர்கள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட, நான்கு அடிகள் உயரமுள்ள, ஆனைமுகனின் அற்புதத் திரு உருவத்தை பொது ஆண்டு 2௦௦௦ல், பீனிக்ஸ் பெருநகரின் இந்து சமய மக்களுக்கு அன்பளிப்பாக அளித்து, அவர்கள் முழுமுதற் கடவுளான ஆனைமுகனை வணங்கிட, இந்து மக்களின் சமய உணர்ச்சி பொங்கிப் பெருகிட, வழிசெய்தார்,.
அவரது ஆசியுடன், ஒரு வீட்டில் வைத்து வழிபடப்பட்ட விநாயகருக்குக் கோவில் எழுப்புவதற்காக, பக்தர் குடும்பம் ஒன்று பதினைத்து ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியது. ஆலயம் அமைக்கும் பணியில் அநுபவமே இல்லாத அன்பர்கள் பலர் ஆனைமுகத்தோனுக்கு ஆலயம் எழுப்ப உறுதிபூண்டு, முயற்சி எடுக்கத் துவங்கினார்கள்..
முதலில் 2100 சதுர அடி அளவுள்ள தாற்காலிகக் கட்டிடத்தில் ஆனைமுகனை பிரதிஷ்டை செய்தனர். ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் பணி புரியவும், மக்களின் வீட்டு பூஜைகள், திருமணம், ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு அர்ச்சகர் நியமிக்கப்பட்டார்.
ஆகம முறையில் ஆனைமுகனுக்குப் பெரிய ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற அவா மக்கள் இதயத்தில் எழுந்தது. கோவில் நடத்திய 500×500 நன்கொடை, மாதா மாதம் காணிக்கை செலுத்தும் திருப்பணி, “மகிமா” என்னும் கலை நிகழ்ச்சி இவை மூலம் பணம் குவியத் துவங்கியது.
தமிழ்நாட்டின் சிறந்த கோவில் ஸ்தபதிகளில் ஒருவரான திரு முத்தையா ஸ்தபதியின் வடிவைப்பு உதவியுடன் ஆனைமுகனின் ஆலயம் உருப்பெறத் துவங்கியது.
7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். 2008ல் ஆனைமுகன் நடுநாயகமாக எழுந்தருள, கோதாவரி ஆற்றுக் கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், பாலாஜியும், அவருக்கு இரு புறமும், மற்றும் நவக்கிரகங்களும் பிரதிஷ்டை (உயிரூட்டம்) செய்யப்பட்டார்கள்.
arizona-temple-3
விமானங்களும், இராஜ கோபுரமும் கட்ட, உள்ளமைப்பாகக் கூடுகளும் கட்டி முடிக்கப்பட்டன. கவ்வை ஆதீன குருவான சத்குரு போதிநாத வேலன்சுவாமி பிராணப் பிரதிஷ்டைத் திருவிழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணி ஆற்றி, அமெரிக்காவில் எண்ணற்ற கோவில்களில் குடமுழுக்கு செய்வித்த திரு தங்கரத்தின பட்டர் சிவாச்சாரியார் தலைமையில், நான்கு புரோகிதர்கள் பிராணப் பிரதிஷ்டை செய்யும் பணியில் ஈடுபட்டார்கள்.
arizona-temple-4
கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேலான பக்தர்கள் ஆனைமுகனின் புது ஆலயத் திறப்பு விழாவைக் கண்டு களித்தார்கள்.
ஆனைமுகன், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி இவர்களின் பஞ்சலோக உற்சவத் திரு உருவங்களும் வந்து சேர்ந்தன. திருவிழாக் காலங்களில் அவை நன்கு அலங்ககரிக்கப்பட்டு, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
விநாயக சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு விழா, யுகாதி, மகர சங்கராந்தி/பொங்கல் போன்ற விழாக்களுடன், மகாருத்ரம் போன்ற சிறப்பு நிகழ்சிகளும் பக்தர்களைப் பரவசப் படுத்தின. இரண்டு அர்ச்சகர்கள் கோவிலில் பணி புரியத் துவங்கினர். சனி, ஞாயிறு மட்டுமன்றி, மற்ற நாள்களிலும், மாலை கோவில் திறக்கப்பட்டது. கடவுளர்களுக்கு நிவேதனம் செய்ய, பிரசாதமும் பக்தர்களே தயாரித்துக் கொணர்ந்தார்கள். திருவிழாவின் போது குழுமும் பக்தகோடிகளுக்கு உணவு இலவசமாகவே வழங்கப்பட்டது.
arizona-temple-8
முருகனுக்கும், ஐயப்பனுக்கும் சன்னதிகள் எழுப்படவேண்டும் என்று தமிழ், மற்றும் மலையாள பக்தர்கள் விரும்பினார்கள். அதற்காகக் காணிக்கை குவிந்தது. முருகன் ஐயப்பன் சன்னதிகளோடு, விசாலாட்சி, பத்மாவதி இவர்களுக்கும் சன்னதிகள் எழுப்ப முடிவு எடுக்கப்பட்டது. கோவிலில் தரையில் பளிங்குக்கல் பதிக்கப்பட்டது.
arizona-temple-6
இந்தியாலிருந்து புதுச் சிற்பிகள் வந்தார்கள். அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே தங்குவதற்காக ஒரு மோபில் வீடு ஒன்று வாங்கி, கோவில் நிலத்திலேயே நிறுவப்பட்டது. சிற்பிகள் சிவன், மற்றும் பாலாஜியின் கர்ப்பக்கிரகங்களை ஆகம முறைப்படி வடிவமைத்து, சுதைச் சிற்பங்களையும் நிறுவினார்கள். ஐயப்பன் சன்னதி கேரளக் கோவில் மாதிரி வடிவமைத்துக் கட்டப்பட்டது. ஒவ்வொரு சன்னதியின் மீதும் கலசங்களும், சுதைச் சிற்பங்களும் எழுப்பப்பட்டன. சிற்பி சண்முகநாதனின் கைத்திறமையைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அவர் சிற்ப சாஸ்திரத்தை விளக்கும் விதத்தை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் வடித்திருக்கும் ஒவ்வொரு தெய்வச் சிலைகளும் பார்ப்போரைக் கவர்ந்து இருக்கும் தெய்வீக அழகுடன் துலங்குகின்றன. பக்தர்களுக்கு உணவு சமைப்பதற்காக மடைப்புளி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
arizona-temple-72011ல், முருகன், ஐயப்பன், விசாலாட்சி, பத்மாவதி இவர்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு செய்விக்கப்பட்டது. விநாயகர், சிவன், பாலாஜி இவர்களின் கர்ப்பக்கிரகங்களுக்கு தேக்கு மரத்தில் புடைப்புச் சிற்பங்கள் உள்ள கதவுகளும் பொருத்தப்பட்டன.
இந்தத் தடவையும், தங்கரத்தின பட்டர் சிவாச்சாரியார் தலைமையில் எட்டு புரோஹிதர்கள் குடமுழுக்கு விழாச் சடங்குகளையும், வேள்விகளையும் நன்கு நிறைவேற்றினார்கள். சத்குரு வேலன்சுவாமியும் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இரண்டாயிரம் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் விழா நிகழ்சிகளைக் கண்ணுற்றார்கள்.
விஸ்வநாதரும், விசாலாட்சியும் கோவிலை அலங்கரிக்கும்போது, ஆடலரசர் நடராஜரும், அன்னை சிவகாமியும் அருளாசி பாலிக்கவேண்டும் என்ற விருப்பமும், காக்கும் கடவுளான சத்தியநாராயணரும், மக்களுக்கு அருட்செல்வத்தை வாரி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தன. அத்துடன் பக்த அனுமானும், இராமர், இலக்குவர் சீதையும் கோவிலில் குடிபுகவேண்டும் என்ற பேரவாவும் உண்டாகியது. முதலாவது கட்டமாக, ஆனைமுகன், சிவன், பாலாஜி இவர்களின் விமானப் திருப்பணியை முடித்துக் குடமுழுக்கும், அத்துடன், நடராஜர்-சிவகாமி, மற்றும் சத்யநாராயணர் சந்நிதிகளையும் திறக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கடைசி கட்டமாக, இராமர்-சீதை-இலக்குவன், பக்த அனுமான் சந்நதிகளையும், இராஜகொபுரக் குடமுழுக்கையும் நிறைவேற்றுவதாகத் திட்டமும் இடப்பட்டது.
arizona-temple-5திருப்பணி செய்ய வாய்ப்பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள். விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, கணிக்கைகளிச் செலுத்தினார்கள். ஆயிரக்கணக்கில் செங்கல்கள் பக்தர்கள் ஆதரவில் குவிந்தன. சன்னதிகளும், விமானங்களும் எழுந்தன.
பீனிக்சின் கடும் வெய்யிலையும், கடும் குளிரையும், உஷ்ணக் காற்றையும் பொருட்படுத்தாது சிற்பிகள் உழைத்தனர். அவர்களுக்குப் பொழுது போக்கிற்காக, பக்தர்கள் அவர்களை விடுப்பு நாள்களில் சுற்றுலாவுக்குக் கூட்டிச் சென்றார்கள். தங்கள் நற்குணத்தால் சிற்பிகள் அரிசோனா ஆலயக் குடும்பத்தில் ஒருவராகவே ஆனார்கள்.
காஞ்சி சங்கர மடம், தில்லைக் கோவில், சாயி மையத்திலிருந்து ஆசிச் செய்திகள் குவிந்தன. இலட்ச கணபதி காயத்திரி, தன்வந்தரி ஹோமம் போன்ற சிறப்பு நிகழ்சிகள் மக்கள் நலத்திற்காக நடத்தப்பட்டன. சிவானந்தலஹரி என்ற இடைவெளியே இல்லாத, சிவத் தலங்களைச் சிறப்பிக்கும் நாட்டியக் கலை நிகழ்ச்சி ஒன்று, பீனிக்ஸ் பெருநகரில் உள்ள பரதநாட்டியப் பள்ளி மாணவர்களைக் கொண்டு, பரத நாட்டிய ஆசிரியைகளால் சிறப்பாக நடத்தப்பட்டு, திருப்பணிக்கு நிதி திரட்டியது.
arizona-temple-9
2014 மே மாதம் பக்தர்களின் கனவு நிறைவேறியது. மூன்று விமானங்களுக்குக் குடமுழுக்கும், நடராஜர்-சிவகாமி சன்னதி, மற்றும் சத்தியநாராயணர் சன்னதி பிராணப் பிரதிஷ்டை, மற்றும் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறின.
arizona-temple-9aஇரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள், குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு, கடவுளர்களின் அருள்வெள்ளத்தில், மூழ்கிப் பரவசம் கொண்டனர். தங்கரத்தின பட்டர் சிவாசாரியார் கலந்து கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டதால், வெங்கடேச குருக்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று, ஆகம முறைப்படி குடமுழுக்கு விழாவையும், பிராணப் பிரதிஷ்டைகளையும் நன்கு நிறைவேற்றினார். ஐந்து புரோஹிதர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
மூன்று நாள்கள் நிகழ்ந்த இத் திருநாள்களில் அனைவருக்கும், மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டது. கோவில் தொண்டர்களே உணவு சமைத்து, பரிமாறும் திருப்பணியை மனமுவந்து செய்தனர். இயற்கை அன்னையும், தன் சீற்றத்தைக் குறைத்து, அந்த மூன்று நாள்களிலும் மிதமான வெப்பத்தையே தந்து அருளினாள். நூறு டிகிரிக்குப் பதிலாக, அதிகபட்ச வெப்பத்தை எழுபத்தி ஆறாகக் குறைத்தது கோவில் திருவிழாவுக்குத் தன் பங்கு திருப்பணியை இயற்கை அன்னை ஆற்றியதன்றி வேறொன்றும் இல்லை அல்லவே!
நானூற்றி ஐம்பது குடும்பங்கள் (ஆயிரம் பேருக்கும் அதிகமானோர்), சத்தியநாராயண பூஜை செய்தனர். அதற்காக மிகப் பெரிய கூடாரம் ஒரு தாற்காலிகமாக அமைக்கப்பட்டது.
இச் சமயம் ஒரு இறை அருள் பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. டென்வர் என்னும் பெருநகரில் உள்ள ஒரு பெண்மணியின் கனவில் இறைவி சிவகாமி தோன்றி, “நான் இங்கு வரப் போகிறேன். எனக்குத் திருவிழா நடக்கப்போகிறது. நீ அதற்கு வரவேண்டும்!” என்று அழைத்தார்களாம். அதுவரை அரிசோனா ஆலயத்தைப் பற்றிக்கூட அறியாத அந்த அம்மையார், எங்கு சிவகாமி அன்னை இருக்கிறாள் என்று விசாரித்து, அமெரிக்காவிலேயே அன்னை சிவகாமி பிரதிஷ்டை செய்யப்படப் போகும் கோவில் அரிசோனாவில் மட்டுமே உள்ளது என்று அறிந்து, குடமுழுக்குத் திருநாளுக்குத் தன் கணவருடன் வந்து, இக்கலி காலத்தில் நிகழ்ந்த அற்புதத்தை அனைவருக்கும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். கேட்ட அனைவரும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
arizona-temple-9c
arizona-temple-9bஇன்னொரு அடியவர் தன் தோட்டத்தில் விளைந்த, ஆனைமுகன் திருவுருவம் கொண்ட ஒரு பச்சைத் தக்காளியை எடுத்து வந்தார். அது ஆனைமுகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆடியும், பாடியும், வந்த அனைவரையும் மகிழ்வித்தனர். மாலை நடராஜர்-சிவகாமி ஊர்வலத்திற்குப் பிறகு குடமுழக்கு விழா நிறைவு பெற்றது.

ஜூன் 28ல் நடராஜருக்கும், சத்யநாராயணருக்கும் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. அவ்வமயம், ராஜகோபுரம் கட்டும் பனியின் துவக்கமாக, வடக்கு கோபுரத்திற்கு வைக்கும் செங்கல்களுக்குச் சிறப்புப் பூஜை செய்யப் பட்டது.
அவைகளுடன், பக்தர்கள் தங்கள் பெயர்களை எழுதி உபயம் செய்த செங்கல்களும், பொசுக்கும் தரையின் சூட்டையும் பொருட்படுத்தாது, ஊர்வலமாக எடுத்து வரப் பட்டன. அவைகள் பக்தர்களால் கோபுரக் கட்டமைப்பின் முதல் சுற்றில் வைக்கப்பட்டன. கோபுரத் திருப்பணி அந்த நன்நாளில் துவக்கம் ஆகியது.
arizona-temple-9e

No comments:

Post a Comment