10.09.2014 துக்ளக் தலையங்கத்தில் இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்று ஆணித்தரமாக எழுதி விட்டு இதை ஒப்புக்கொள்ளமுடியாத மாபெரும் குற்றம் என்றும் திரு. சோ அவர்கள் எழுதியுள்ளார். ஹிந்து மஹா சமுத்திரம் என்ற பெயரை பள்ளிப்புத்தகங்களில் இருந்து மாற்ற வேண்டும் என்று போராடாமல் இருந்தால் சரி. 10.09.2014 தலையங்கத்தில் திரு. சோ அவர்கள் //இது ஹிந்து நாடு. இங்குள்ள அனைவரும் ஹிந்துக்கள்தான். என்று பாஜகவினர் சிலரும் ஹிந்து அமைப்பினர் பலரும் பிரச்சாரம் செய்யத்தொடங்கி இருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூட இப்படி பேசியிருக்கிறார். இது சற்றும் ஏற்க முடியாத பேச்சு. இங்குள்ள அனைவரும் இந்துக்கள் தான் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வலுவாக திணித்து ’எல்லோருமே ஹிந்துக்கள் என்று பேசுவது சற்றும் ஏற்கக் கூடிய விசயம் அல்ல. ‘அனைவரும் இந்தியர்கள் என்றால் ஒப்புக்கொள்ளலாம்’. //
இப்படிப்பட்ட கருத்தை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய சோ பதிவிடலாமா? ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியன் என்ற சொல்லுக்கும் மொழி வேறுபாட்டை தவிர வேறு என்ன இருக்கிறது.
இந்தியா என்பது ஹிந்து என்ற சொல்லின் மருவு என்கிறது விக்கிபீடியா.
The name India is derived from Indus, which originates from the Old Persian word Hinduš.
http://en.wikipedia.org/wiki/India - retrieved on 28.09.2014
இந்தக்கருத்தை ஆங்கில அகராதியான oxford English dictionary மேற்கோள் காட்டியும் உள்ளது. இந்த முடிவிற்கு oxford English dictionary வருவதற்கான பின்னணி என்ன என்பதைச் சற்றே பார்க்கலாம். இந்தியா என்ற சொல்லின் விளக்கத்தை பதிவிட்ட சிகாகோ பல்கலைகழகத்தின் குறிப்புகளை நாம் சற்று பார்க்கலாம். ”Digital Dictionaries of South Asia” என்ற நூலில் ”A Glossary of Anglo-Indian Words and Phrases” என்ற தலைப்பில் இந்தியா என்ற சொல் பல தரவுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இந்த அகராதி, சிகாகோ பல்கலைகழகம் மற்றும் மத்திய ஆராய்ச்சி நூல்நிலையத்தின் வெளியீடாகும். இந்தியா என்பது United Kingdom, United States போன்ற பல நாடுகளின் தொகுப்பு என்ற பிதற்றல்களும், ஆங்கிலேயன் வருவதற்கு முன்னால் அப்படி ஒரு நாடே இருந்ததில்லை என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் ஊடகங்களில் சில காலமாக வளைய வந்து கொண்டிருக்கிறது. இந்த அரைவேக்காட்டு பிரச்சாரத்திற்கும் பதிலளிக்க திரு. சோ அவர்களின் தலையங்கத்தை பயன்படுத்துவது ஒருவகையில் மகிழ்ச்சிதான். Digital Dictionaries of South Asia, பல தரவுகளிலிருந்து வெளியிட்ட இந்தியா பற்றிய தொகுப்பை இப்போது பார்ப்போம்.
//இந்தியா பற்றிய விளக்கங்களின் துல்லியம், சில கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பிரதிபலிப்பதோடு, இப்போது நாடு பற்றி நமக்கு இருக்கும் கருத்தோடு இசைந்து போகிறது; இந்தக் கருத்து தான் Hwen Tsang, இன்னும் பிற சீன யாத்ரீகர்களின் உரைகளில் துலக்கிக் காட்டப் பட்டிருக்கிறது. அசோகர் காலத்திய கல்வெட்டுக்களில் (கி.மு..250) இந்தக் கருத்தை கணிசமாக ஒட்டியபடி இந்திய ராச்சியங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன; கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத்தான தஞ்சாவூர் கல்வெட்டில் தஞ்சை சோழ அரசன் வீர சோழனால் இந்தியாவின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது (கற்பனையோ நிஜமோ) தெளிவுபடுத்தப்பட்டிருப்பதோடு, அதிலும் இதே முறை தான் பின் பற்றப்பட்டிருக்கிறது. கல்யாணின் சாளுக்கிய வம்சத்தவர், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பட்டயத்தில், ”ஹிமாலயம் முதல் பாலம் வரை” என்ற ஒரு சொற்றொடர் வருகிறது (Ind. Antiq. i. 81) அதாவது ராமரின் பாலம் என்னும் நமது வரைபடங்களில் காணப்படும் Adam's Bridge. இதன் கீழே அதே காலத்தைச் சேர்ந்த முகம்மதிய விளக்கங்களிலும் இந்தப் பெயர் காணப்படும். விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த ஹிந்து அரசர்களின் (14ம் நூற்றாண்டு முதல்) கல்வெட்டுக்களிலும் இந்தியாவை இது போன்ற விளக்கங்கள் மூலம் குறிக்கிறார்கள்.
இந்தப் பெயரின் தோற்றம் சந்தேகமே இல்லாமல் (சமஸ்கிருதம்), சிந்து, ‘கடல்’, அது மேற்கில் இருக்கும் மகத்தான ஆறு, அதன் கரைகளில் இருக்கும் நாடு, இதை இன்றும் கூட நாம் சிந்த் என்றே அழைக்கிறோம். உலகின் பல பாகங்களில் நிலவும் மாற்றம் காரணமாகவும், இந்தியாவிலேயே கூட பல பாகங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இந்தப் பெயர் இஸ் ஒலியின் இடத்தில் மெய்யொலி இடம் பெறுகிறது அதுவே கடைசியாக பாரசீகத்தில் ஹிந்து என்று ஆகி, கிரேக்கர்களுக்கும், லத்தீன் மொழிக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு மக்களுக்கு INDOI எனவும், ஆற்றுக்கு INDO/S எனவும், INDIKH/ and INDIA என அதன் கரைகளில் இருக்கும் நாட்டுக்கும் மறுவிப் போனது, மேற்கத்தியர்களுக்கு இந்தப் பெயர் அளிக்கப்பட்டு, நாம் முன்னே கூறிய நாடு பற்றிய ஒட்டு மொத்த கருத்தும் அந்நிய நாட்டவர் வாய்களில் இயல்பாக, ஆனால் காலப் போக்கில் மொத்தமாகவே மாறிப் போனது.//
//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.
இந்தியா என்ற நிலப்பரப்பை ஒரே நாடாக எப்படி உலகம் தொன்றுதொட்டே கருதி வந்ததோ அது போலவே தென்னகத்துச் சோழனும் வடநாட்டு அசோகனும் மத்திய இந்தியாவின் சாளுக்கியனும் பார்த்துவந்ததை இந்த நூல் மேற்கோள் காட்டியுள்ளது. வெளிநாட்டவன் வைத்த பெயர் இந்தியா என்று கொக்கரிக்கும் தமிழ் வியாபாரிகள் வீர சோழனை வந்தேரி என்று திட்டாமல் விட்டால் சரி தான். பெளத்தமே கதி என்று சொல்லி அடிப்படை பெளத்தம் தெரியாமல் ஹிந்துக்களை மதமாற அழைக்கும் பகுத்தறிவுவாதிகள், உலகத்திலேயே முதன்முறையாக அரசு எந்திரத்தை பயன்படுத்தி மதம்மாற்றம் செய்த ’பெளத்த’ மன்னன் அசோகனின் ஆதாரத்தையாவது நம்புவார்களா?
இந்த நிலப்பரப்பின் பெயர் ஹிந்து என்ற சொல்லின் அடிப்படையாக கொண்டது என்பதை நிறுவியுள்ளது Digital Dictionaries of South Asia. இதன் அடிப்படையில் இந்த நிலப்பரப்பில் வசிப்பவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்த India, Hindu என்ற சொல்லாட்சி எந்தெந்த காலங்களில் எப்படி யாரால் பயன்படுத்தபட்டது என்பதை Digital Dictionaries of South Asia தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது.
//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.//
இதில் ‘Hindush’ என்று தான் இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. ஆக, ஹிந்துஸ்தான் என்பது இந்த நாட்டின் பெயர் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 486 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இங்கு கூட நம்மவர்கள் கிரேக்க மன்னனுக்கு கப்பம் செலுத்திய செய்தி பதிவாகியுள்ளது. அந்த அடிமைத்தனத்தின் விளைவோ என்னவோ பிற்கால கிறிஸ்தவ மிஷனரிகளிடம் அடிமைப்பட்டு கிடக்கும் சிந்தனாவாதிகளால், இந்தியா ஒரே நாடு இல்லை என்றும் ஆங்கிலேயன் வந்த பிறகே இது ஒரு நாடானது என்ற கருத்து மேலோங்கியுள்ளது போலும்!.
கி.மு.440 ல் சிந்து நதி முதல் கடல் வரை இருக்கும் அனைவரும் இந்தியர்கள் அவர்கள் உதயசூரியனுக்கு மிகவும் நெருக்கமாக வசிக்கிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. இதைப் படித்து விட்டு தான் அண்ணா அமெரிக்கா சென்று அமெரிக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழனின் சின்னம் உதயசூரியன் என்று அறிவித்தார் என்று கழகக் கண்மனிகள் முழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரே ஒரு சிக்கல் அது சிந்து முதல் குமரி வரை என்று உள்ளது. சிந்துவுக்கு கூட புது விளக்கங்கள் உதயசூரியன் மண்ணில் உதயமாகலாம். இதோ அந்த கிமு 440 ஆண்டின் மேற்கோள்.
//கி.மு.. 440 - “இந்தியாவுக்கு கிழக்கே முழுமையாக மணலாக ஒரு பிரதேசம் விளங்குகிறது. ஆசியாவில் வசிக்கும் அனைத்து பேர்களிலும், அவர்களைப் பற்றித் தெரிந்த வரையில், இந்தியர்கள் தாம் கிழக்குக்கும், உதயசூரியனுக்கும் மிக நெருக்கமாக வசிக்கிறார்கள்.” Herodotus, iii. c. 98 (Rawlinson) //
இந்தியாவின் வரைபடத்தையே கிமு300ல் தத்ரூபமாக விளக்குகிறார் கிரேக்க பயணியும் புவியியலாளருமான மெகஸ்தனிஸ்.
//கி.மு. 300 - இந்தியா அப்போது (H (TOI/NUN*) INDIKH\) வரைபடத்தில் நான்கு பக்கம் கொண்டதாக இருக்கிறது, கிழக்கு நோக்கி ஒன்றும், தெற்கு நோக்கி ஒன்றும், பெரிய கடல் அதைச் சூழ்ந்தும்; வட துருவத்தை நோக்கிய பகுதி Hēmōdus என்ற மலைச் சங்கிலியால் Scythia முதல் பிரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே Sakai என்று அழைக்கப்படும் Scythianகள் பூர்வகுடிகள் வசிக்கிறார்கள்; நான்காவது பக்கமான மேற்கு நோக்கிய முகத்தில், இண்டஸ் எல்லைக்கோடாக இருக்கிறது, இது தான் நீல நதிக்குப் பிறகு மிகப் பெரிய அல்லது அனைத்து நதிகளிலும் பெரியதாக இருக்கிறது.” - Megasthenes in Diodorus, ii. 35. (ம்யூலரின் Fragm. His. Graec., ii. 402)//
இங்கு '
indikh' என்ற சொல் ஆளப்படுகிறது. இங்கிலாந்து என்ற நாடு உருவாவதற்கு பல் நூற்றாண்டுகள் முன்பே எல்லை வரையருக்கப்பட்டது மட்டுமின்றி இந்தியா என்ற பெயரும் பயன்பாட்டில் உள்ளதையாவது, ஆங்கிலேயன் வந்தபின் இந்தியா உருவானது என்று கொக்கரிக்கும் கூட்டங்கள் ஒப்புக்கொள்வார்களா? அல்லது போலி இனவாதம் பேசுவார்களா?
கி.பி. 590ல் இந்தியாவின் விஸ்தீரணத்தை அதைப் பயணித்துக் கடக்கும் நேரத்தைக்கொண்டு விளக்கும் பயணக்குறிப்பை
Digital Dictionaries of South Asia கீழ்கண்டவாறு விளக்குகிறது.
//c. 590 - ஹிந்த் நிலத்தைப் பொறுத்த மட்டில் இது கிழக்கே பாரசீக கடலாலும், (அதாவது இந்தையக் கடல்) மேற்க்கிலும், தெற்கிலும், இஸ்லாத்தின் நாடுகளாலும், வடக்கே சீனப் பேரரசாலும் சூழப்பட்டிருக்கிறது..... இந்த ஹிந்த் நிலத்தின் நீளம் Mokraan நாட்டு அரசிலிருந்து, Mansoora நாடு, Bodha, சிந்த் முழுக்கவிருந்தும் Kannuj வரை நீண்டும், பிறகு Tobbat (TIBET) வரையும், சுமார் 4 மாதங்கள், அதன் அகலம் இந்தியக் கடலிலிருந்து Kannuj நாடு வரை சுமார் 3 மாதங்கள்”: Istakhri, pp.6ம் 11ம்.//
பன்நெடுங்காலமாகத் தொடர்ந்த அன்னியப் படையெடுப்புகளால் இந்தியாவின் பெயர் விளக்கம் பல சிக்கல்களை சந்திக்க தொடங்கியது. இந்தியாவை இந்து என்று அழைக்கவேண்டும் என்று ஹுவான் சுவாங் சொன்னதை மேற்கோள் காட்டுகிறது Digital Dictionaries of South Asia.
//c.650. - "Tien-chu (இந்தியா) என்ற பெயர் பல்வேறு, குழம்பிய நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது......... பண்டைய காலங்களில் அவர்கள் Shin-tu என்று அழைத்தார்கள் ஆனால் சில எழுத்தாளர்களோ, இதை Hien-teou என்று அழைத்தார்கள். இதன் உண்மையான உச்சரிப்பின் படி பார்த்தால் இதை In-tu என்று தான் சொல்ல வேண்டும்” - Pèl, Bouddh, i i, 57ல் ஹுவான் சுவாங்.//
இந்து என்ற பெயரைக்கேட்டவுடன் ஆரியம், வெள்ளையனின் கண்டுபிடிப்பு என்றெல்லாம் ஓலமிடுபவர்கள் அவர்கள் சிந்தனைகளை செதுக்கும் சீனா நாட்டின் பயணியின் குறிப்பை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் என்று ஒப்புக்கொள்வார்களா?
சீனர்களும், கிரேக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த நாட்டின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வாங்காதவர்கள் அதனால் அவர்கள் இந்து சார்பு நிலையை எடுப்பவர்களாகத்தான் இருப்பார்கள் இந்த நாடுகளில் சகோதரத்துவம் சமத்துவம் கிடையாது. ஆகவே, சகோதரதுவத்தையும், அமைதியையும் உலகுக்கு கொடுத்த இஸ்லாமியர் சொன்னால் நம் நாட்டு அறிவுஜீவிகள் பொதுவாக ஒத்துக்கொள்வார்கள் சில சமயங்களில் ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அப்துல் கலாம் கருத்து தெரிவித்தால் கலாமை கலகம் என்று முத்திரை குத்தும் பழக்கமும் உண்டு. என்ன தான் நிலைக்கெட்ட மனிதர்களாக இருந்தாலும், பாரசீக முஸ்லீமான அபு அல்-ரைஹான் முகமது இபின் அகமது அல்-பிருனியின் 11ம் நூற்றாண்டு குறிப்பிற்கு தடைவிதிக்கக் கோரி மெளண்ட்ரோட்டுக்கு மூடுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்! எப்படி இந்த நாட்டை அவர் வருணிக்கிறார் என்று பாருங்கள்.
// c. 1020. - ”இந்தியா (அல்-ஹிந்த்) என்ற ஒரு சமவெளி, தெற்கிலே இந்தியர்கள் கடலால் சூழப் பட்டிருக்கிறது. வானளாவிய மலைகள் அதன் மற்ற இடங்களை சூழ்ந்திருக்கிறது. இந்த சமவெளி வழியாக மலைகளிலிருந்து பெருகி வரும் நீர்கள் வெளியேறுகின்றன. மேலும் இந்த நாட்டை உங்கள் கண்களா நீங்கள் ஆராய்ந்தால், இங்கே உருண்டையான, தேய்ந்து போன கற்கள் இருப்பதை இதன் மண்ணில் காணலாம், ஆனால் நீங்கள் மலைகள் அருகே, ஆறுகள் வலிமையோடு கீழே பெருகி வரும் இடங்களில் தோண்டிப் பார்க்கலாம், அங்கே கற்கள் பெரியவையாக இருக்கின்றன; ஆனால் மலைகளிலிருந்து சற்றுத் தள்ளி நீரோட்டம் சற்று மட்டுப் பட்டிருக்கும் இடங்களில் சிறியவையாக இருக்கின்றன; நீரோட்டம் சலனமில்லாமல் இருக்கும் இடங்களில் மணல் நிரம்பிக் கிடக்கிறது, அங்கே நீர்கள் நிலத்தில் ஊறுவதைப் பார்க்க முடியும், கடல் இருக்கும் இட்த்தில், இந்த இடமே ஒரு காலத்தில் கடலில் இருந்திருக்கலாம் என்றும் நீரோட்டங்கள் கொண்டு வந்த மணல், கற்கள் மூலமே இது உருவாகியிருக்க கூடும் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது...... “ அல் பிரூனியின் Reinaud's Extracts, பத்திரிக்கை. As. ser. 4. 1844.//
அன்பு மணக்குது அருள் சுரக்குது அரபு நாட்டிலே என்று பாட்டு எழுதும் தமிழ் கவிஞர் பாரசீக அல்பரூனியை படித்திருந்தால் தெளிவு பெற்றிருந்திருப்பார். பாரசீகத்தில் இவர்கள் கண்ணில் தென்படுவது திருடர், கொள்ளையர் போன்ற குறிப்புகள் தானே. நீ எதுவாக இருக்கிறாயோ அதுபோல்வே தான் உனக்கு பார்ப்பதெல்லாம் தோன்றும் என்ற முதுமொழியை இப்போது நன்றாக புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு இஸ்லாமியர் இந்திய நிலப்பரப்பை மெகஸ்தனீஸ் போல் 13ம் நூற்றாண்டில் விவரிக்கிறார்.
//1205. - "இந்த மொத்த நாடான ஹிந்தும், Pershaur முதல் கடலின் கரைகள் வரையும், மற்ற திசையில், Siwistan முதல் Chin மலைகள் வரை.........” - Hasan Nizaami, in Elliot, ii. 236. அதாவது, வடக்கே பெஷாவர் தொடங்கி, தெற்கே இந்தியப் பெருங்கடல் வரையும்; Sehwan (இண்டஸ் நதியின் மேற்குக் கரையில்) தொடங்கி சீனாவை கிழக்கே பிரிக்கும் மலைகள் வரை.//
வாஸ்கோடகாமா ஒரு ரோமானியராக இருந்திருந்தால் தன் பெயருடன் இந்தியாவை சேர்த்திருப்பார் என்கிறது 16ம் நூற்றாண்டு குறிப்பு.
//1533. - "வாஸ்கோடகாமா ரோமானியர்களைப் போன்ற மகோன்னதமான நாட்டைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், அவர் தனது குடும்ப பாணிக்கு அழகு சேர்த்திருப்பார், அதாவது Of India என்ற அடைமொழியை தன்னோடு சேர்ப்பதன் மூலமாக. ஏனென்றால், இத்தகைய கௌரவ சின்னங்கள் ஒருவருக்கு வம்ச வழியாக கிடைக்கும் சின்ன்ங்களை விட பெருமை சேர்ப்பதாக இருக்கும், ஆனால் Scipio தான் ஆப்பிரிக்காவைக் கண்டுபிடித்த அடையாளமாக Africanus என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டார், கார்னீலியஸ் என்ற தன் குடும்பப் பெயரை சூட்டிக் கொள்வதால் அல்ல.//
கிறிஸ்து பிறப்பதற்கு 450 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் நாட்டில் காலனி படையெடுப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படும் வரை இமயம் முதல் குமரி வரையிலான நிலப்பரப்பு இந்தியா, ஹிந்த் என்றும் இங்குள்ளவர்களை இந்தியர்கள் ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டு வந்ததை இந்தக்குறிப்புகள் உறுதி செய்கின்றன.
மேற்கூறப்பட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்தளித்த ‘Digital Dictionaries of South Asia’வின் லிங்க் இதோ:
இந்தியாவை ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் 'East India Company' என்ற பெயரையே தாங்கி நின்றன.
1600 - English East India Company (இங்கிலாந்து)
1602 - Dutch East India Company (நெதர்லாந்து)
1628 - Portuguese East India Company (போர்ச்சுகல்)
1664 - French East India Company (பிரெஞ்சு)
இதில் வேடிக்கை என்னவென்றால் போர்ச்சிகீஸ் கிழக்கிந்திய கம்பெனியின் சின்னத்தில்(logo) நம் தென்னிந்திய கோவில் இடம் பெற்றிருக்கிறது போர்ச்சிகீசியர் இந்த நாட்டிற்குள் படையெடுத்து வரும் போது இங்கு ஹிந்துக்கள் முஸ்லீம்கள் பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர். ஆனால் போர்ச்சுகீசியரோ ஹிந்து ஆலயத்தை மட்டும் சின்னத்தில் இடம்பெறச்செய்ததது இந்த நாட்டில் வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும் பண்பாட்டில் அனைவரும் ஹிந்துக்கள் என்பதை உணர்த்துகிறது.
தமிழ்நாட்டு அரசின் கோபுரசின்னமும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது. இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் தெரிந்து ஹிந்து என்பது இந்த தேசமும் அதன் குடிகளும் என்று உரக்க முழங்கியவர் நாயக்கர் ராமசாமி.
//பொதுவாகச் சொல்லப்பட வேண்டுமானால் இந்து என்பது இந்தியனைத் தான் குறிக்கும். அரபிக்காரனை ஒரு அரப் என்பது போல், இந்தியனை வட மொழியில் இந்து என்று ஆதியில் அழைக்கப்பட்டது என்பது தான் என் அபிப்ராயம்//
- (குடி அரசு, டாக்டர் பி.வரதராசலு நாயுடு கட்டுரைக்கு விடை, 8.9.1940)- பெரியார் ஈ.வே.ரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து அவர்கள் புத்தகத்தின் 348 ஆம் பக்கத்தில் இந்த மேற்கோள் இடம்பெற்றுள்ளது.
ஹிந்துக்களை அனுதினமும் அவதூறாக பேசிவந்த நாயக்கர் இராமசாமிக்கு தெரிந்த இந்த உண்மை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய ஐயர் இராமசாமிக்கு தெரியாமல் போனது ஏனோ?